கூடங்குளம் - தமிழக அரசின் நிபுணர் குழு முடிவு - ஒரு பார்வை

அன்பார்ந்த நண்பர்களே!



கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்ய தமிழக அரசு இன்று ஒரு குழுவை நியமித்துள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க முடிவு என்றாலும் இது மிக மிக தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்பதை யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்றே நம்புகிறோம்.

தினசரி 8 மணிநேர மின்வெட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன் இந்த குழுவை அமைத்திருந்தால் கூட பரவாயில்லை. தற்போது இரவில் கூட 8 மணிநேரம் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைப்பதில்லை என்பது தான் உண்மை.

நம் முதல்வர் சென்ற ஆட்சியின்போது மின்வெட்டை சரிசெய்யாததால் அந்த அரசை செயல்படாத அரசு என்று கூறியதை யாரும் மறுக்கமுடியாது.

தற்போது இவ்வளவு போராட்டங்கள் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மின்பற்றாக்குறையை சமாளிக்க இந்த நடவடிக்கையை முன்பே எடுத்திருந்தால் தமிழக மக்களிடம் அரசுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்த அணுமின் நிலையமானது 1988ல் முடிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து 1997ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ரூபாய் 13615 கோடி ரூபாய் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த அணு அலை 2000 மெகாவாட் திறன் கொண்டது.

அப்படிப்பட்ட அணு உலையை ஆய்வு செய்த மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய நமது முன்னாள் ஜனாதிபதியும் உலகுக்கே இந்தியாவின் வலிமையை உணர்த்திய அணு விஞ்ஞானியுமான திரு. அப்துல்கலாம் அவர்கள், இந்த அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்றும் இதன்மூலம் அப்பகுதிக்கு எந்த பாதிப்பும் வராது எனவும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் விளக்கியது அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு இருக்கும்போது இப்போது முதல்வர் அறிவித்துள்ள குழுவை அப்போதே அறிவித்திருந்தால் தற்போது குழுவின் அறிக்கை கிடைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.

அதேபோல் இந்த கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் அவர்களுக்கு உண்மையிலேயே அந்தப்பகுதி பொதுமக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், தங்கள் போரட்டத்தை 1997ம் ஆண்டிலேயே ஆரம்பித்திருந்தால், நம்முடைய வரிப்பணத்தை முதலீடு செய்வதை தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் தற்போது நடத்தும் போராட்டத்தைப் பார்க்கும்போது மத்திய அரசு அவர்கள்மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானோ என எண்ண தோன்றுகிறது.

வெகு விரைவில் நன்மை நடக்கும் என்று நம்புவோம்.

தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.

விரும்பினால் மற்ற நண்பர்களுக்கும் அனுப்பவும்.

No comments:

Post a Comment